மகள் பூப்பெய்திய உடனேயே அவளது கல்யாணம் குறித்த கவலை பெற்றோரைப் பற்றிக் கொள்கிறது. மகளுக்கு பாத்திரங்களும் நகைகளும் சேர்ப்பதும், அவளது பெயரில் முதலீடு செய்வதும்தான் அவளது எதிர்காலப் பாதுகாப்புக்கான விஷயங்கள் என்பது பல பெற்றோரின் கருத்து.

ஆனால், ஒரு பெற்றோருக்குக்கூட, மகளின் ஆரோக்கியம் எப்படியிருக்கிறது, அவளது உடல் திருமண வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறதா என்கிற நினைப்புகூட இருப்பதில்லை. உண்மையில் உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய சொத்து, நோயற்ற வாழ்க்கையும் ஆரோக்கியமும்தான்! பூப்பெய்திய பெண்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கவே செய்கிறது.

ஆனால், ‘அந்த வயதில் அப்படித்தான் இருக்கும்… கல்யாணமானால் எல்லாம் சரியாகி விடும்’ என்கிற நினைப்பில் அதை அலட்சியம் செய்கிறவர்கள்தான் அதிகம். ஆகவே அம்மாக்களே… உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கும் முன், மாதவிலக்கு கோளாறுகளைக் கண்டுபிடித்து, சரி செய்யப் பாருங்கள்.

‘பெரும்பாடு’ எனப்படுகிற அதிகப்படியான ரத்தப் போக்கு பல இளம் பெண்களையும் பாடாகப் படுத்துகிறது. உடலில் ‘அழல்’ எனப்படுகிற சூடு அதிகமாவதன் விளைவே இது. இதை சரி செய்ய முதல் கட்டமாக உடலைக் குளிர்ச்சியாக்க வேண்டும். கன்னிப்பெண்களின் உடல்நலம் காப்பதிலும், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்துவதிலும் சோற்றுக்கற்றாழைக்குப் பெரும் பங்குண்டு.

சித்த மருத்துவத்தில் சோற்றுக்கற்றாழைக்கு ‘கன்னி’ என்றே பெயர்! சோற்றுக்கற்றாழையைப் பறித்து, மேல் தோலையும் முள்ளையும் நீக்கிவிட்டு, நடுவிலுள்ள நுங்கு போன்ற பகுதியை சுமார் பத்து முறைகள் தண்ணீரில் அலசுங்கள். பிறகு அதில் பனைவெல்லம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் உங்கள் மகளுக்குக் கொடுங்கள். பிற்பகலில் சோற்றுக் கற்றாழையை அரைத்து, நீர்மோரில் கலந்து கொடுங்கள். உடலுக்குள் குளிர்சாதன எந்திரம் பொருத்தினது போல அத்தனை குளுமையாக இருக்கும்.

உங்கள் வீடுகளில் எத்தனை நாளைக்கொரு முறை சமையலில் வாழைப்பூ இடம்பெறும்? 2-3 மாதங்களுக்கொரு முறை? அடுத்த முறை வாழைப்பூ வாங்கும் போது, ஒரு நிமிடம் அதை உற்றுக் கவனியுங்கள். கர்ப்பப்பையின் வடிவிலேயே இருப்பது தெரியும். வடிவில் மட்டுமின்றி, குணத்திலும் அது கர்ப்பப்பைக்கு நெருக்கமானது. வாழைப்பூவை அதன் துவர்ப்புச் சுவை மாறாமல் கூட்டாகவோ அல்லது வடையாகவோ செய்து வாரம் 2-3 முறை சாப்பிடுவது, அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

யூடியூபிலும் இணையதளத்திலும் பார்த்துவிட்டு, வாயில் நுழையாத பெயர்களில் கிடைக்கிற வெளிநாட்டுக் காய்கறிகளை எல்லாம் தேடித் தேடி வாங்கி சமைக்கிறீர்கள்தானே? உங்கள் வீட்டுக்கு கீரை கொண்டு வரும் அம்மணியிடம், அடுத்த முறை ‘இம்பூரல்’ இலை எடுத்துவரச் சொல்லுங்கள். அதை லேசாக எண்ணெயில் வதக்கி, உளுத்தம் பருப்பு, மிளகு வறுத்துச் சேர்த்து, கல் உப்பு வைத்து அரைத்து, எலுமிச்சைச்சாறு சேர்த்து துவையலாக அரைத்துக் கொடுங்கள். மகளை மிரள வைக்கிற மாதவிலக்கு பிரச்னைகள் ஓடியே போகும்.

அடுத்தது மாதவிலக்கு நாள்களில் உண்டாகிற வலி. இதை ‘சூதக வலி’ என்கிறோம். கர்ப்பப்பையும், அதைச் சுற்றியுள்ள தசை நாண்களும் வலுவிழப்பதால், உண்டாகிற தசை இறுகல் வலி இது. இதற்கு மாதுளம் பழம் மிக அருமையான மருந்து. மாதுளம் பழமும் கிட்டத்தட்ட கர்ப்பப்பை வடிவிலும், அதன் பூ நுனியானது கருவாய் வடிவிலும் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? மாதுளை மணப்பாகு, மாதவிலக்கின் போதான அழற்சியைத் தவிர்த்து, வலியை நீக்கும்.

இப்போதும் கிராமங்களில் பூப்பெய்தும் இளம் பெண்ணுக்கு, உளுத்தங்களியும் உளுந்து வடையும் தருவது ஒரு சடங்காகவே நடைபெறுகிறது. நாகரிகத்துக்கு மாறிப்போன நகரத்துப் பெண்களுக்கு அதெல்லாம் தெரியாமல் போனதன் விளைவுதான், ‘இடைப்பூப்பு’ எனப்படுகிற மாதவிலக்கு சுழற்சியின் இடையிடையே ஏற்படுகிற உதிரப் போக்கும், கர்ப்பப்பை பலவீனமும்… கருப்பையின் உள்வரிச் சுவர் முறையாக உருவாகாமையாலும், அது உதிர்ந்து, முறையாக வெளியேறாத ‘தோஷ நிலை’தான் இதற்குக் காரணம். உளுத்த கர்ப்பப்பையை உரமாக்கி, மேற்சொன்ன பிரச்னைகளை சரியாக்க ஒரே மருந்து உளுந்து.

மாதம் தவறாமல் மாதவிலக்கு வந்தால்தான் ஆரோக்கியம். சிலருக்கு 3 மாதங்களுக்கொரு முறை வரும். திடீரென நின்று போகும். சூதகத் தடை என்கிற இந்தப் பிரச்னைக்குக் காரணம் ரத்தமின்மை. பனைவெல்லம் சேர்த்த திராட்சைச்சாறும், பனைவெல்லப் பாகில் செய்த கருப்பு எள்ளுருண்டையும் இந்தப் பிரச்னையைக் குணப்படுத்தும். கடைசியாக வெள்ளைப்படுதல்… கர்ப்பப்பையை தூய்மையாக வைத்துக் கொள்ளாததே இதற்குக் காரணம். நமது உடலில் அமிலத்தன்மை, காரத்தன்மை என இரண்டு உண்டு.

இரண்டும் சம விகிதத்தில் இருக்க வேண்டும். அமிலத்தன்மை குறைந்து, காரத்தன்மை அதிகரித்தால், உடல் சூடும் அதிகமாகி, வெள்ளைப்பட ஆரம்பிக்கும். பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளும் சீக்கிரமே பற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க, உணவில் அடிக்கடி வெண்பூசணி, சுரைக்காய், முள்ளங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே…’ என இனி எந்தப் பிரச்னையையும் அலட்சியப்படுத்தாதீர்கள் அம்மாக்களே…

அந்த வயதில் நீங்கள் அலட்சியப்படுத்துகிற சின்ன விஷயம், உங்கள் மகளின் எதிர்காலத்தோடு விளையாடுவதற்கு சமம்… பூப்பெய்திய மகளிடம் மனது விட்டுப் பேசுங்கள். அவளது மாத சுழற்சி எப்படியிருக்கிறது எனக் கேளுங்கள். எது இயல்பானது, எது இயல்புக்கு மாறானது என எடுத்துச் சொல்லுங்கள். டாக்டர் தெ.வேலாயுதம் சொன்ன செய்முறைப்படி, 3 உணவுகளை இங்கே செய்து காட்டியிருக்கிறார் ‘ரெசிபி ராணி’ சந்திரலேகா ராமமூர்த்தி.

உளுத்தங்களி

என்னென்ன தேவை?

கருப்பு உளுந்து – கால் கிலோ,

பனைவெல்லம் – கால் கிலோ,

நல்லெண்ணெய் – 200 மி.லி.

எப்படிச் செய்வது?

உளுந்தை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, வடிகட்டி, மறுபடி அடுப்பில் வைக்கவும். அதில் உளுந்து பொடியை சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். நன்கு வெந்ததும், நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, இறக்கவும். வயதுக்கு வந்த பெண்களுக்குக் கொடுத்தால் இடுப்பு எலும்பு வளர்ச்சி பெறும். உடல் மெருகடையும். ரத்தப் போக்கு சிக்கல்கள் தீரும்.

முள்ளங்கி துவையல்

என்னென்ன தேவை?

முள்ளங்கி – 2,

புதினா இலை – 1 கைப்பிடி,

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

மிளகு – அரை டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப,

நெய் – சிறிது.

எப்படிச் செய்வது?

முள்ளங்கியைத் தோல் நீக்கி, நறுக்கி, நெய் விட்டு வதக்கித் தனியே வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு புதினா இலை, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். முள்ளங்கியுடன் சேர்த்து, உப்பு வைத்து அரைக்கவும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, மாதவிலக்கு நாள்களில் ஏற்படுகிற வயிற்றுவலியும் சிறுநீர் எரிச்சலும் சரியாகும்.

வாழைப்பூ கூட்டு

என்னென்ன தேவை?

ஆய்ந்து, சுத்தம் செய்து,

நறுக்கிய வாழைப்பூ – 2 கப்,

பயத்தம் பருப்பு – அரை கப்,

வெங்காயம் – 1,

பச்சை மிளகாய் – 2,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

தேங்காய்த் துருவல் – கால் கப்,

சீரகம் – அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது,

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,

கடுகு – கால் டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பயத்தம் பருப்பை மலர வேக வைக்கவும். தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளிக்கவும். பிறகு அதில் வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வெந்ததும் பருப்பு சேர்க்கவும். உப்பும், அரைத்த விழுதும் சேர்த்து, அளவாகத் தண்ணீர் விட்டுக் கொதித்ததும் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.மாதவிலக்கு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் இது மருந்து.

Source: http://www.penmai.com/forums/teenagers/107321-foods-teenage-girls.html#ixzz4A7f1UDI0

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s